சாரல்

ரயில்வே பட்ஜெட் : தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்

Posted by: சாரல் on: பெப்ரவரி 26, 2007


அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்த 2007-08ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை – யஷ்வந்தபூர் (பெங்களூர்) இடையே தினசரி புதிய ரயில் விடப்படுகிறது.

அதே போல கோவை மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு புதிய தினசரி ரயில் அறிமுகமாகிறது.

சென்னை எழும்பூர்-நாகூருக்கு நேரடி புதிய ரயில் விடப்படுகிறது. இதுவரை கேரளத்தில் கோட்டயம் திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வந்த ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் அகலப் பாதை முடிந்தவுடன், சென்னையிலிருந்து வாரம் 6 நாட்கள் இயங்கும் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வருக்கு புதிய வாரம் ஒருமுறை ரயில் விடப்படுகிறது.

திருச்சி-மதுரை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, திருச்சூர்-குருவாயூர் பாதைகள் 3 ஆண்டுகளில் மின்மயமாகிறது.

ரயில்வே பட்ஜெட்டின் பிற முக்கிய அம்சங்கள்:

ரயில்வே இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

முதல் வகுப்பு ஏசி கட்டணம் குறைகிறது. நெரிசல் மிக்க காலத்தில் ஏசி முதல் வகுப்புக் கட்டணம் 3% குறைக்கப்படும், சாதாரண நாட்களில் 6% குறைக்கப்படும்.

மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டிகளில் கட்டணம் நெரிசல் காலத்தில் 4 சதவீதமும் கூட்டம் குறைவான நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும்.

அனைத்து சாதாரண ரயில்களிலும் இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ. 1 குறைக்கப்படுகிறது.

அதிவேக ரயில்களில் 2ம் வகுப்புக்கான கட்டணத்தின் மீதான சர்சார்ஜ் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் கட்டணமும் 20 சதவீதம் குறையும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 72க்கு பதிலாக 84 படுக்கைகள் இருக்கும். இதில் கட்டணமும் 4 சதவீதம் குறைவாக இருக்கும்.

இன்டர்நெட் மூலம் ஆன்லைன் டிக்கெட் வாங்குவோருக்கு சர்வீஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு கட்டணத்துக்கு இதுவரை வாங்கப்பட்டு வந்த ரூ. 25 இனி ரூ. 15 ஆகக் குறையும். ஏசி வகுப்புக்கு சர்வீஸ் கட்டணம் ரூ. 40ல் இருந்து 20 ஆகக் குறைகிறது.

2006-2007ம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 14 சதவீதமும் சரக்கு போக்குவரத்து 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ரயில்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசலுக்கான சரக்குக் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படும். இதனால் இதன் விலைகள் குறைந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும்.

14 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்

ரயில்வே பெட்டிகள் பயணிகளுக்கு அதிக வசதி மிகுந்ததாக மாற்றப்படும்

200708 ம் ஆண்டு தூய்மை ஆண்டாக கடைபிடிக்கப்படும்

ரயில்களில் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவி அமைக்கப்படும்

மார்ச் மாதத்திற்குள் 225 புதிய ஸ்டேஷன்கள்

இந்தியா முழுவதும் ரயில்வே விசாரணைக்கான புதிய எண் 139

சரக்குக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

சீசன் டிக்கெட் கட்டணத்திலும் மாற்றம் இல்லை

உடல் ஊனமுற்றோருக்கு தனி பெட்டிகள்

மும்பை மின் ரயில்கள் மேம்பாட்டுக்கு ரூ. 5,000 கோடி ஒதுக்கீடு

ஐஐஎம் அகமதாபாத்தில் ரயில்வே நிர்வாகம் குறித்த பிரிவு தொடங்கப்படும்

ரயில்வே தனியார்மயமாகாது.

முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

எஃகு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தனி ரயில்கள்

32 புதிய ஏழைகள் ரதம் ரயில்கள் அறிமுகம்

டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாம்டாப் வழங்கப்பட்டு, காலியான சீட்கள் குறித்த விவரம் அப்டேட் செய்யப்படும். :-)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மின் மயமாக்கப்படும்

நாடு முழுவதும் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படும்

ரயில் வருகைகிளம்பும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்

பொதுப் பெட்டிகளில் (அன்ரிசவர்ட்)மரக் கட்டை சீட்களுக்கு பதிலாக குஷன் சீட்கள் போடப்படும்.

பிபாவா-ஜெய்ப்பூர் இடையே இரட்டை அடுக்கு ரயில் விடப்படும். இந்த சோதனை ரயில் வெற்றி பெற்றால் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

சரக்குப் போக்குவரத்துக்கு 3 அடுக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

முன் பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் 8,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்படும்

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் ரயில் டிக்கெட் விற்பனை

பால், காய்கறி கொண்டு போக பயணிகள் ரயில்களில் தனிப் பெட்டிகள்

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு 50% கட்டண சலுகை

முதியோர்கள், பெண்களுக்கு லோயர் பர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கு கோட்டாவும் அறிமுகப்படுத்தப்படும்.

பாஜக அமளி:

பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் பாஜக கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டதால் மக்களவையும் மாநிலங்களவையும் அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டன.

போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலிய தொழிலபதிபர் குவேத்ராச்சி அர்ஜெட்டினாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று கூறி பாஜக கூட்டணி அமளி செய்தது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியதும் பாஜகவின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். குவோத்ராச்சிக்கு எதிராகவும், சோனியா காந்திக்கு எதிராகவும் பாஜக, சிவசேனா, சமாஜ்வாடி கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்த நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் லாலு.

ஒரு கட்டத்தில் கூச்சல் அதிகமாகவே எரிச்சலான லாலு, எதிர்க் கட்சிகள் கடமையில் இருந்து தப்ப நினைக்கின்றன, நாங்கள் புதிய சிந்தனைகளால், செயல்களால் ரயில்வேயை லாபகரமாக மாற்றிவிட்டோம். இதை பொறுக்க முடியாமல் கத்துகின்றனர் என்றார். இதையடுத்து கூச்சல் மேலும் அதிகமானது. ஆனாலும் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு தான் பாட்டுக்கு பட்ஜெட்டை படித்து எதிர்க் கட்சியினரை மேலும் டென்சனாக்கினார்.

மறுமொழி இடுக