தேர்தல் 2011

பா.ம.கவை மையமாக கொண்டுள்ள கூட்டணி அரசியல்

Posted by: சாரல் on: பெப்ரவரி 23, 2011

தனக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை பா.ம.க. உறுதி செய்து கொண்டுவிட்ட போதிலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் பா.ம.க.வை முன்வைத்தே பெரும்பாலான கட்சிகள் பேசி வருகின்றன.

திமுக அணியில் பா.ம.க. இடம் பெறும் என்றாலும் 2006 அளவுக்குத் தொகுதிகள் கிடைக்காது என்று பேசப்பட்ட நிலையில், முந்தைய 31 தொகுதிகளைப் போராடிப் பெற்றுவிட்டார் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

காங்கிரஸ் கட்சி சுமார் 80 தொகுதிகளைக் கேட்ட நிலையில், பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முந்தைய அளவுக்கே பா.ம.க.வுக்கு கிடைத்துவிட்டதால், அதை ஒட்டியே மற்ற கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திமுக குழுவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பா.ம.க.வுக்கு கொடுத்துள்ளதில் பாதியையாவது தங்களுக்குத் தர வேண்டும் என்கின்றனர்.

கடந்த தேர்தலில் அதிமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்தது. சென்னையில் அதிமுகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்ததற்கு தங்கள் ஆதரவுதான் காரணம் என்று இந்தக் கட்சியினர் கூறிவருகின்றனர்.

2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் இப்போது அதைவிட கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர்.

80 தொகுதிகள் கேட்டு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த முறை 48 தொகுதிகளில் இக் கட்சி போட்டியிட்டது. திமுக அணியில் கைவசம் கூடுதலாக உள்ள 23 தொகுதிகளில் (கடந்த முறை இடதுசாரிகளுக்கு ஒதுக்கிய எண்ணிக்கை) விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியது போக மீதியைத்தான் காங்கிரஸ், திமுக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். எனவே 32 தொகுதி கூடுதலாகப் பெறுவது சாத்தியமற்றது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

இருந்தாலும் முடிந்தவரை அதிகமான தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

2006-ல் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்த முறை எட்டுக்கும் குறையாத அளவில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்த முதல்வர், தேர்தலிலும் அதை வழங்குவார் என்று அந்தத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அதிமுக அணியில் தேமுதிக சேருமா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. தேமுதிக வராவிட்டால் பா.ம.க.வை அதிமுக சேர்த்துக் கொள்ளக்கூடும் என்ற வாய்ப்புக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

தேமுதிகவுக்கும் கூட்டணி சேருவதாக இருந்தால் அதிமுக மட்டுமே இப்போதைக்கு உள்ள வாய்ப்பாக உள்ளது. வேறு வழியில்லாத சூழ்நிலையில் அதிகமாக தொகுதி கேட்டு பேரம் பேசும் வாய்ப்பும் தேமுதிகவுக்கு இப்போது குறைந்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூட்டணி வாய்ப்பை உதறிவிட்டு தேமுதிக தனியாக நிற்பது தற்கொலைக்குச் சமம் என்பது அவர்களின் கருத்து.

திமுக அணியில் பா.ம.க.வுக்கு முந்தைய அளவில் தொகுதி ஒதுக்கியிருப்பதால், அதிமுக அணியில் தங்களுக்கும் அதேபோல ஒதுக்க வேண்டும் என மதிமுக கோருகிறது. கடந்த முறை போட்டியிட்டதுபோல 35 தொகுதிகளையாவது தர வேண்டும் என அதன் தலைவர்கள் வலியுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

2006-ல் கூட்டணியில் இருந்ததைவிடக் கூடுதலான கட்சிகள் இப்போது இருப்பதால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று அதிமுக தரப்பில் ம.தி.மு.க.வுக்கு கோடிட்டுக் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்து கொண்டுவிட்ட பா.ம.க.வைக் காட்டியே தங்கள் கோரிக்கையை முன்வைக்கின்றன இதர கட்சிகள். இதனால் சிக்கலில் சிக்கிக்கொண்டிருப்பது என்னவோ தி.மு.க.வும், அதிமுகவும்தான்.

நன்றி தினமணி

குறிச்சொற்கள்: , ,

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.