மழைச் சாரல்

Posts Tagged ‘காதலர் தினம்

காதலுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒத்துவராது. சுதந்திரமும், அடிமைத்தனமும் கைகோத்து நடக்க முடியாது என்பது இயற்கைதானே! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் நாள் வரும்போது, ஒரு விவாதம் வருகிறது. இப்போது அது மெல்ல மெல்ல முற்றி மோதலாகிக் கொண்டிருக்கிறது.

காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள், இரண்டு, மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர். பண்பாட்டுச் சீரழிவு என்றும், மேலைநாட்டு இறக்குமதி என்றும், வணிக உத்தி என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ‘வாலன்டைன் டே’ என்னும் பெயர் வேண்டுமானால் இறக்குமதியாக இருக்கலாம். காதல் இறக்குமதி அன்று. அது நம்பழந்தமிழ்ப் பண்பாடு. அதை ஏன் நாம் மறுக்க வேண்டும் ? அந்தக் குறிப்பிட்ட நாள் மேலைநாட்டவரால் குறிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அதனை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டுமா என்ன ? அப்படிப் பார்த்தால், மகளிர்தினம், மனித உரிமைகள் தினம் போன்றவற்றிற்கான நாள்களும் கூட அங்குதானே குறிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளி விட்டோமா ? தள்ளுவது சரியா ?

உலகமே வணிகமயமாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம் மட்டும் அதற்கு விதிவிலக்காக நின்று விட முடியாது. எனவே அதனைக் காரணம் காட்டிக் காதலர் தினத்தை எதிர்ப்பது பொருந்தாது. இந்துத்துவவாதிகள் அந்நாளை எதிர்ப்பதற்கு, மறைக்கப்பட்ட காரணம் ஒன்று

உண்டு. காதல் எப்போதும் சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆதலால், காதலை அனைவரும் ஏற்றுக் கொண்டால், சாதிய இறுக்கம் உடைந்து போகும். சாதிய இறுக்கம் இல்லையெனில், இந்துமதத்தின் வருணாசிரமத்தை எவராலும் காப்பாற்ற முடியாது ? இதுதான் உண்மையான காரணம். இதனை மறைத்துக் கொண்டு, பண்பாடு காப்பதாய் இங்கு ஒரு பாசாங்கு நடக்கிறது.

சென்ற காதலர் தினத்தில், கையில் தாலிகளுடன், சங் பரிவாரக் கும்பல், திருச்சி மலைக் கோட்டைப் பக்கம் அலைந்தது. யாரேனும் காதலர்கள் தென்பட்டால், உடனே அவர்கள் கையில் தாலியைக் கொடுத்துக் கட்டச் சொல்வது. மறுத்தால் அவர்களை அடித்து உதைப்பது. எவ்வளவு பெரிய கருத்தியல் வன்முறை இது! இவ்வருடமும் இதே போன்ற வன்முறையை, சென்னை உள்ளிட்ட தலைநகரங்களிலும் அரங்கேற்றுவது என்று அவர்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல்.

சாதி மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் காதலர் தினத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காதல் குறித்த கலை இரவுகளைக் கூட நடத்தலாம். சாதி மறுப்புத் திருமணங்களை ஊர் ஊராக நடத்தி வைக்கலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பல்வேறு வழிகளிலும், காதலின் சிறப்பை வலியுறுத்துவதற்கு அந்த நாள் பயன்படட்டும்!

http://www.keetru.com/thamizhar/feb09/loversday.php

குறிச்சொற்கள்: